நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த 74 வயது முதியவருக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா ஆவணத்தில் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டுள்ள இருவரது பெயரை நீக்குவது குறித்து இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்த காலத்தில் அமல்படுத்தவில்லை எனக்கூறி முதியவர் ஜான்சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குறிப்பிட்ட காலத்தில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்காத அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளதாகத் தீர்ப்பளித்தார்.
அதன்படி, கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இந்த தொகையை மூவரும் தங்கள் சொந்த ஊதியத்திலிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதே சமயம் உத்தரவை அமல்படுத்த வேண்டிய தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, ஒரு மாத ஊதியத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.