அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அதில், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவன தலைமை அதிகாரி டிம் குக்கிடம் நீண்ட காலத்துக்கு முன்பாகவே தெரிவித்திருந்ததாகக் கூறினார்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி இல்லாவிட்டால் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்குக் குறைந்தபட்சம் 25% வரி செலுத்த வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன் உற்பத்தியைக் குறைத்து, இந்தியாவில் அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தது.
இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்போதே ஆட்சேபனை தெரிவித்திருந்தார். இதனிடையே டிரம்ப் எதிர்ப்பை தாண்டி சமீபத்தில் இந்தியாவில் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரிவிதிக்கப்படும் என மீண்டும் மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.