சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரை முற்றுகையிட்டு பல்கலைக் கழக தற்காலிக ஊழியர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அல்லாத தற்காலிக ஊழியர்களை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பணிக்கு வரவைக்க வேண்டாம் என அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் கடந்த 22-ம் தேதி அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இது தற்காலிக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்குத் தீர்வு காண அவர்கள், பதிவாளர் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் உரியத் தீர்வு கிடைக்காத நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அண்ணா பல்கலைக் கழகம் வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை அவர்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் தங்கள் குறைகளைக் கூறி அவர்கள் கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.