திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனையால் தந்தையைக் கொன்றவரை, மகன் படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் என்பவருக்கும், அவரது சகோதரி மகன் சக்கரவர்த்திக்கும் இடையே, நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திம்மராயனை வெட்டிக் கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சில தினங்களுக்குமுன் ஜாமினில் வெளிவந்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட மனைவியுடன் நேற்று சென்றார்.
பொன்னேரி பகுதியிலுள்ள கோயில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது காரில் வந்த 5 பேர், சக்கரவர்த்தியையும், தடுக்க வந்த அவரது மனைவியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் முதற்கட்டமாக திம்மராயன் மகன் பாரத், அவரது நண்பர்கள் வெங்கடேசன், வசந்த குமார், அக்பர் பாஷா, திப்பு சுல்தான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையைக் கொன்றதால் மகன், பழிக்குப் பழியாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.