உலக வான்வெளி அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைக்கப் போகும் மேம்பட்ட நடுத்தர ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் பாதுகாப்புப் படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, அதற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நூற்றுக்கும் அதிகமான ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரித்து வைத்துள்ளன. துருக்கி, தென்கொரிய ஆகிய நாடுகளும் ஐந்தாம் தலைமுறை விமானப் போட்டியில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன. இத்தகைய சூழலில் மற்ற நாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐந்தாம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா களமிறங்கியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்புத்துறையை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்திலும் தயாரிக்கப்படும் இந்த போர் விமானங்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மற்ற போர் விமானங்களை ஒப்பிடும் போது குறைவான எடை கொண்டிருக்கும் இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்காத வகையில் தயாரிக்கப்படுகிறது. நான்காம் தலைமுறை விமானங்களை ஒப்பிடும் போது மேம்பட்ட, அதிநவீன சென்சார் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளோடு இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இவ்வகையிலான விமானங்கள் ஒளியை விட வேகமாகப் பறக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட உள்ளன. குறைந்த எரிபொருளில் அதிகளவு தூரம் பறக்கும் திறன் உள்ளதோடு, வான்வெளி உலகில் வீழ்த்தவே முடியாத அளவுக்கு இந்த போர் விமானங்கள் உருவாக்கப்பட உள்ளன.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ச்சியான பதட்ட நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கும், பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் ராணுவ சக்திக்கும் சவால் அளிக்கும் வகையில் இந்த ஐந்தாம் தலைமுறை விமானத்தை உருவாக்குவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த மேம்பட்ட நடுத்தர போர் விமானங்கள் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும்,பாதுகாப்புப் படைக்கு வலுசேர்ப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு அரங்கில், இந்தியா வலிமையான நாடாக உருவெடுக்க உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.