முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை மிக மோசமாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் 1 கோடியே 96 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை 2 மாதங்களிலேயே சேதமடைந்து விட்டதாகவும், கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வரும் அளவுக்கு மிக மோசமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், தார் சாலையில் புல் முளைத்துள்ளதாகவும், தரைப்பாலத்தின் தடுப்புச் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து தரமற்ற சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.