நொய்யல் ஆற்று வெள்ளப்பெருக்கில் கழிவு நீர் கலந்து வெளியேறுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுவாணி மலை அடிவாரத்தில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ராஜவாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் சீராக செல்கிறது. இந்த நிலையில் கோவை புறநகரில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள ஒண்டிப்புதூர் தடுப்பணை, ராவத்தூர் தடுப்பணை, செங்கத்துறை தடுப்பணை, செந்தேவிபாளையம் தடுப்பணைகளில் ஏற்கனவே தேங்கியுள்ள கழிவு நீருடன் மழை நீரும் கலந்து நுரையுடன் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சூலூரில் உள்ள குளங்களுக்கு வெள்ள நீர் வரத்து அதிகரித்துள்ளது.
எனினும், குளங்களில் ஏற்கனவே கழிவுநீர் கலந்திருப்பதால், அசுத்தமான நீரை வெளியேற்றிவிட்டு, புதிய நீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.