காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் 4 வழிச்சாலை பணிகளை துவங்க வந்தனர்.
அப்போது விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கேத்பட் தலைமையில் அங்கு வந்த காங்கிரஸார், அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல பலமுறை போலீசார் அறிவுறுத்தியும், அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தாரகை கேத்பட் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.