திமுக-வைச் சேர்ந்த ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த அண்ணா பல்கலை மாணவியின் வழக்கில், திமுக-வைச் சேர்ந்த ஞானசேகரன் குற்றவாளி என்பதனை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ள, மாண்புமிகு சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்கிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சட்டப்படியான நீதியின் முன்பிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்பதை இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு உறுதியாக்கியுள்ளது.
அரசியல் தொடர்பையும், ஆட்சியாளர்களுடனான தொடர்பையும் பயன்படுத்திக் கொண்டு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கும் இத்தீர்ப்பு ஒரு சம்மட்டி அடியாகியுள்ளது. ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைந்துள்ளது.
இந்த கடினமான மற்றும் நெருக்கடியான காலகட்டத்திலும், தனது மனவலிமையோடு குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களை அளித்து, இந்த வழக்கு வெற்றி பெற போராடிய மாணவிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். தங்களது இந்த வலி மற்றும் வலிமை நிறைந்த போராட்டமானது, ஒவ்வொரு பெண்களுக்கும் தனி உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என எல். முருகன் தெரிவித்துள்ளார்.