சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு ஏற்பட்டு ராட்சத ராட்டினம் அந்தரத்தில் நின்றது தொடர்பாக விளக்கம் கேட்டு அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவல்துறை தரப்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு கருவிகள் மற்றும் ராட்டினங்களில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதா என்றும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா எனவும் வினவியுள்ளனர்.
மேலும், பொழுதுபோக்கு பூங்கா தொடர்பான ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்க வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.