திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைவதற்கு முன்பே அவசர அவசரமாக திறக்கப்பட்டு, இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 408 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
இதனை கடந்த 9-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். இந்நிலையில், அந்த பேருந்து நிலையத்தில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகள் கூட முடிவடையாததால், பேருந்து நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகள் பெயர்ந்து மீண்டும் அதனை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.