பயங்கரவாதிகளோடு எம்பிக்களை ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது என்றும், அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் வெளியில் சுற்றுகின்றனர் எனவும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.
மேலும், நம் எம்பிக்கள் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர் என்றும், அரசு தரப்போ, தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் பேசியிருந்தார். இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவே நம் எம்பிக்கள் சென்றுள்ளனர் என்றும், நமது எம்பிக்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ் தொடர்ந்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், காங்கிரசின் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஷெஹ்சாத் பூனாவாலா வலியுறுத்தியுள்ளார்.