ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்ததாகப் பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே பாகலூர் பகுதியைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவர் தனது நண்பருக்கு அனுப்ப வேண்டிய 10 ஆயிரம் ரூபாயைத் தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாகக் காவலர் ஒருவரிடம் நடத்தவற்றைக் கூறியபோது, அவர் 1930 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணில் புகார் அளித்தபோது, எதிர்முனையில் பேசிய நபர், ஆதார் எண், பான் எண், வங்கி விவரங்களைக் கேட்டு வாங்கியதுடன் ஜிபே மூலம் ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். 24 மணிநேரத்தில் ஒரு ரூபாயுடன் சேர்ந்து 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி திம்மராயப்பா ஒரு ரூபாயை ஜிபே மூலம் அனுப்பி வைத்த நிலையில், அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டதாக அந்த அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்குக்குப் பணம் வராததால் மீண்டும் விசாரித்தபோது, ரஞ்சித் என்பவருக்கு ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தால், 24 மணிநேரத்தில் மொத்த பணமும் வந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் என்பவரின் ஜிபே எண்ணுக்கு திம்மராயப்பா ஒரு லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், அந்த பணமும் வராததால் மீண்டும் 1930 எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திம்மராயப்பா அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















