திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நாளில் யாக வேள்விகள் முதல் விமான கலச நன்னீராட்டு வரை எங்கும் தமிழ் ஒலிக்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஆகிய இரு மொழிகளில் நடைபெறும் என தெரிவித்தார். நன்னீராட்டு விழா முடிந்த பிறகு 4 மணி நேரம் கழித்துதான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
மேலும், குடமுழுக்கு நாளில் வருகை தரும் பக்தர்களுக்காக கூடுதலாக அடிப்படை வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.