உலகின் முதல் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப், தமக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனப் புலம்பி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் தமது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார். அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திருவிளையாடல் படத்தில் நடிகர் நாகேஷ் புலம்பியபடி தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் புலம்பி வருகிறார். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
பாகிஸ்தான் கெஞ்சிக்கேட்டுக் கொண்டதால், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். உடனடியாக இந்தியா இதை மறுத்தது.
சிலநாட்களுக்கு முன் அதிபர் ட்ரம்புடன் தொலைப்பேசியில் உரையாடலின் போதும், போரை நிறுத்தும் படி பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஆப்ரேஷன் சிந்தூரின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக, பிரதமர் மோடி தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், எந்த நாட்டின் மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்றும் பிரதமர் மோடி உறுதிப் படுத்தியிருந்தார்.
இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தாலும், போர் முடிவுக்கு வர ட்ரம்ப் காரணம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது. இதன் மூலம் அமெரிக்கா உடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அமெரிக்காவின் ஆதரவுடன், காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்குச் சாதகமான முடிவைக் காணப் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் தரப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ட்ரம்ப் அவருக்கு மதிய விருந்து அளித்து மகிழ்ந்தார்.
அடுத்தப்படியாக, 2026ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு வழங்க வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு முறைப்படி பரிந்துரை செய்துள்ளது.
இந்தச் சூழலில், பல நாடுகளுக்கு இடையே உருவான போர் பதற்றத்தைத் தணிக்க உதவிய தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்று ட்ரம்ப் தன் ஆதங்கத்தைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசை நான்கு, ஐந்து முறை தனக்குத் தந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தரமாட்டார்கள் என்றும் அழுத்தமாக கூறியுள்ள ட்ரம்ப், தாராளவாதிகளுக்குத் தான் நோபல் பரிசு தருவார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியாவுடன் சேர்ந்து, காங்கோ-ருவாண்டா அரசுக்கு இடையே ஒரு அற்புதமான அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதற்காக தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான், செர்பியா- கொசோவோ, எகிப்து- எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதற்கும் தமக்கு நோபல் பரிசு கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டியதற்கும் தமக்கு நோபல் பரிசு கிடைக்காது என்று கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்- ஈரான் உட்படத் தான் உலக அமைதிக்கு என்ன செய்தாலும், தமக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும், என்ன செய்கிறேன் என்று மக்களுக்குத் தெரியும் என்றும், அது தனக்கு போதும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலகத்தில் நாடுகளுக்கு இடையேயான மோதல்களைத் தீர்ப்பதற்கும்,அமைதியை வளர்ப்பதற்கும், முயற்சி எடுத்தவர்களுக்கு ஆண்டு தோறும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வேட்புமனு குறித்து நோபல் விருது குழு, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.