விண்வெளிக்குச் செல்லும் வரை பெண்களின் நிலை உயர்ந்த காலத்திலும், வரதட்சணை கொடுமை மட்டும் இன்னும் இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக நடந்துள்ளது இந்த சம்பவம். ஓர் இளம்பெண்ணிற்கு நேர்ந்த துயரம் பலரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் செட்டிபுதூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கே சாலையோரம் நின்றிருந்த காருக்குள் இளம்பெண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணை அவிநாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். யார் அந்த இளம்பெண்? அவரது வாழ்க்கையைச் சூறாவளியாய் சுழற்றியடித்த சோகத்தின் பின்னணிதான் என்ன? போலீசார் நடத்திய விசாரணையில்தான் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தன.
அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு ஒரு கட்சியின் சார்பாக ஈரோடு இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவி, மிதுன் ஆதித்யா என்ற மகன் இருக்க, ரிதன்யா என்ற மகளைத்தான் தற்போது பறிகொடுத்துவிட்டுத் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்திக்கு சித்ராதேவி என்ற மனைவியும் கவின்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த கவின்குமாருக்கும் ரிதன்யாவிற்கும்தான் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருப்பூரில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
அவிநாசியை அடுத்து பழங்கரையில் உள்ள வீட்டில் கணவர் கவின்குமார் , மாமனார், மாமியாருடன் ரிதன்யா வசித்து வந்துள்ளார். திருமணமான ஓரிரு மாதங்களிலேயே கணவர், மாமனார், மாமியார் என மூவரின் கொடுமையால் ரிதன்யா நிலைகுலைந்து போயிருக்கிறார்.
ரிதன்யாவிற்கு சீர்வரிசையாக 500 சவரன் தருவதாகக் கூறிய அவரது பெற்றோர் முதலில் 300 சவரன் கொடுத்திருக்கின்றனர். இதுதவிர 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் உள்ளிட்ட சீர்வரிசைகள் என இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான 10 நாட்களிலேயே மற்ற 200 சவரன் நகைகளையும் கேட்டு ரிதன்யாவை கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
வீட்டில் குத்துவிளக்கேற்றினால் கூட குறை கண்டுபிடித்தவர்கள், அதற்கு தண்டனையாக ரிதன்யாவை பல மணி நேரம் கால் கடுக்க நிற்க வைத்திருக்கின்றனர். கவின்குமாருக்கு மாத வாடகை பணமே 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வரும் நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தபடி பெற்றோருடன் சேர்ந்து ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் கொடுமை எல்லை மீறிப் போகவே கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரிதன்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். எங்கே தமது மகள் வாழ்க்கையை இழந்து வந்து விடுவாளோ என்று பயந்த பெற்றோர், கொஞ்சம் பொறுத்துக்கம்மா…. சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் கூறியிருக்கின்றனர். ஆனால் நிலைமை கைமீறிப் போக இப்போது ரிதன்யாவின் பெற்றோருக்குப் பலரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இனியும் கொடுமைகளைத் தாங்கி வாழ முடியாது என முடிவெடுத்த ரிதன்யா,
வழக்கம் போல சனிக்கிழமை அவிநாசியை அடுத்து தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு காரில் சென்றிருக்கிறார். அங்கே தரிசனம் செய்துவிட்டு மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்யக் காரை ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் வழியில் செட்டிபுதூர் என்ற பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பூச்சி மருந்து குடித்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை தனது பெற்றோருக்கு ரிதன்யா கதறி அழுதபடி அனுப்பியிருக்கிறார்.
“கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து என்னைக் கடுமையாகச் சித்திரவதை செய்கின்றனர். அதிலும் கணவர் கவின்குமார் என்னை உடல் ரீதியாகக் கடுமையாகச் சித்திரவதை செய்கிறார். இனியும் இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. மற்றொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை… என்னுடைய இந்த முடிவிற்கு எனது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர்தான் காரணம்” எனக் கதறி அழுதபடி கூறிவிட்டு ரிதன்யா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
திருமணம் முடிந்து 78 நாட்களில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருப்பூர் ஆர்.டி.ஓ மோகனசுந்தரம், அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைத்து ரிதன்யாவின் பெற்றோர், கணவர், மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த கவின் குமார், ஈஸ்வரமூர்த்தி மற்றும் சித்ரா தேவி ஆகியோரை ரிதன்யாவின் தம்பி மிதுன் ஆதித்யா மற்றும் உறவினர்கள் ஆத்திரத்துடன் தாக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து தப்பித்து மூவரும் காரில் ஏறி அரசு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் சென்ற காரை உறவினர்கள் தட்டி கூச்சலிடப் பரபரப்பு ஏற்பட்டது.
ரிதன்யாவின் தற்கொலைக்குக் காரணமாக மூவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவிநாசி – சக்தி சாலையில் அமர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், ரித்ன்யாவின் உடலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து சேயூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் ரிதன்யாவை தற்கொலைக்குத் தூண்டியது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர்தான் என்பது உறுதியானது. இதையடுத்து மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகளை மணக் கோலத்தில் பார்த்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் அதற்குள் சடலமாகப் பார்த்த பெற்றோரும் உறவினர்களும் நிலைகுலைந்து போயிருக்கின்றனர். ரிதன்யா பேசிய அந்த ஆடியோவில் கடைசியாகப் பதிவான குரலும் அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரது கோரிக்கையாக இருக்கிறது.