அமெரிக்காவின் GPU-57 பங்கர் பஸ்டர் போன்று, பதுங்கு குழிகளை அழிக்கும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை இந்தியா உருவாக்கி வருகிறது. சர்வ தேச அளவில் வலிமையான இராணுவ சக்தியாக இந்தியா எழுச்சி பெறுவதை இந்த திட்டம் வெளிக்காட்டுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரம், ஈரானின் அணுசக்தி கோட்டையான FORDOW அணுசக்தி தளத்தின் மீது, அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அது போல நிலத்துக்கு அடியில், நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த புதிய ஏவுகணை அமைப்பை உருவாக்குவதன் மூலம் எதிர்காலப் போர்களுக்கு இந்தியாவும் தயாராகி வருகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையின் புதுப்பிக்கப் பட்ட ஆயுதத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. அக்னி-1, 700 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடியது. அக்னி-2, 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியது. அக்னி-3, 2500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடியது. அக்னி-4, 3500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியது. அக்னி-5 ஏவுகணை, அணுஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
அக்னி-5 ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கும் திறன் உடையதாகும். சாலை மார்க்கமாகக் கொண்டு சென்று,இந்தியாவின் எந்த இடத்தில் இருந்தும் இந்த ஏவுகணையை எதிரியின் இலக்கை நோக்கிச் செலுத்த முடியும். இந்தியாவுக்குக் கிழக்கே சீனாவின் மறு எல்லை வரைக்கும், மேற்கே ஐரோப்பா நாடுகள் வரைக்கும் சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. அக்னி-5 ஏவுகணையைத் தயாரித்ததன் மூலம், இந்த பட்டியலில் ஆறாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
பல்வேறு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கிவிட்டு தன்னிச்சையாகத் திரும்பி வரும் தொழில்நுட்பமான Multiple Independently targetable Re-entry Vehicle என்றதொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், பிரமதர் மோடி இதை `மிஷன் திவ்யாஸ்திரா’ என்று பெருமையுடன் அறிவித்தார்.
தொடர்ந்து, சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி -6 ஏவுகணையை உருவாக்கும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு , 7500 கிலோ எடையுள்ள பங்கர் பஸ்டர் போர்முனையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நிலத்துக்கு அடியில், வலிமையாகக் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டுமானத்துக்கு அடியில், உள்ள கடினமான பதுங்கு குழிகளைத் தாக்கும் வகையில் புதிய ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, வெடிப்பதற்கு முன்பு சுமார் 100 மீட்டர் வரை நிலத்துக்கு அடியில் ஊடுருவி வெடிக்கும் என்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதுங்கு குழிகளை அழிப்பதற்கு, B -12 போன்ற விலையுயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை நம்புவதற்குப் பதிலாக, இந்தியா தன் பதுங்கு குழி பஸ்டரை, ஏவுகணை மூலம் அழிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது.
அக்னி-5 ஏவுகணையின் புதிய உருவாக்கத்தில் இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒன்று தரைக்கு மேலே உள்ள இலக்குகளுக்கான வான்வழி வெடிப்பு போர்முனையைக் கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று GBU-57 போன்று அதிக சுமையுடன் கூடிய பூமிக்கு அடியில் கான்க்ரீட் உள்கட்டமைப்பைத் துளைத்து ஆழமாg ஊடுருவும் ஏவுகணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு போர்முனையும் எட்டு டன் வரை எடையுள்ளதாக இருக்கும் என்பதால், இது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த போர்முனைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி-5 ஏவுகணையை விட 2500 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்பட்ட போதிலும், புதிய ஏவுகணை அழிக்கும் திறன் மற்றும் துல்லியம் ஆகியவற்றில் மேம்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை பதுங்கு குழிகள் மற்றும் முக்கியமான இராணுவ உள்கட்டமைப்புக்களைக் குறி வைத்து அழிப்பதற்கு இது முக்கியமானதாக இருக்கும். இது மணிக்கு 24,720 கிலோமீட்டர் வேகத்தில், இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும் .
அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் அமைப்புகளை விடக் குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட ஆயுதத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய பாதுகாப்பு சூழலில், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில், DRDOவின் துணிச்சலான நடவடிக்கை இதுவாகும்.
இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவத் திறன்களும் , பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் நாட்டின் தன்னம்பிக்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.