சிவகங்கை மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய எஸ்.பி-யாக சந்தீஷ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மடப்புரம் கிராமத்தில் திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார், போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்களில் 5 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை முறையாக கையாள தவறிய எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, ராமநாதபுரம் எஸ்.பி-யாக சந்தீஷ் சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பு எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் அவர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் கார் பார்க்கிங்கில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்பவர், தான் புதிதாக வாங்கிய ஆட்டோவின் சாவியை பத்திரகாளியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் பார்த்தபோது அதிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்பீக்கர் மற்றும் ஆவணங்கள் மாயமாகி இருந்தன. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.