காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, இளைஞர் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
விசாரணையில் எந்தவித சந்தேகமும் எழக்கூடாது என்பதற்காக வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.