பாஜகவினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைத் தொடர்வது சரியல்ல என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சமூக வலைத்தளப் பதிவுக்காக, தமிழக பாஜகவைச் சார்ந்த பிரவீண் ராஜ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தனியாக வசிக்கும் முதியோர்கள் கொலை செய்யப்படுவது என, சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விடக்கூடாது என்பதற்காக, முழுநேரமாக தமிழகக் காவல்துறையை, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், என அனைவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் திமுகவினர் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு, சாதாரண சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக, பாஜகவினரைக் கைது செய்யும் சிறுபிள்ளைத்தனத்தைத் தொடர்வது சரியல்ல. ஆட்சி, அதிகாரம் நிரந்தரமல்ல என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.