புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சில மருந்துகள் இருப்பு இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில், பேசு பொருளாகியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த ஹேமநாதன் என்பவர், தனது 2 வயது மகனுக்குச் சிகிச்சை பார்ப்பதற்காக ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் இருப்பு இல்லாததால், வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருந்தக ஊழியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹேமநாதன் மருத்துவரிடம் முறையிட, அவரும் மருந்துகளை வெளியே வாங்கி வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், ஏழை எளிய மக்கள் நாடும் அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்கப்படுவதில்லை எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.