திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 7ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இதற்காகக் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு அதில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கால யாகசாலை பூஜையையொட்டி ஆச்சாரிய விசேஷ சந்தி பூஜை நடந்தது. இதையடுத்து மேளதாளங்கள் முழங்க ஆச்சாரியார்கள் யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து பகல் 11 மணியளவில் திரவிய பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.