முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 100வது ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, கட்டுமானப் பணி தொடங்கிய 37 மாதங்களில், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பல்நோக்குத் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல் நாட்டுக்கு எதிரான கடல்சார் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக வேரறுக்கும் திறன் கொண்டதாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின், தனது கடற்படை சக்தியை இந்தியா மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், நவீனப் போர்க் கப்பல்களை இந்தியா தயாரித்து வருகிறது. PROJECT 17A திட்டம், தற்போது சேவையில் உள்ள சிவாலிக் போர்க் கப்பல்களின் வழித் தோன்றலாகும்.
P-17A என்பது இந்தியக் கடற்படையில் செங்குத்து ஏவுதள அமைப்புகளைப் (VLS) பயன்படுத்தி தரையிலிருந்து வான் ஏவுகணைகளைச் செலுத்தும் முதல் வகை போர்க்கப்பல்கள் ஆகும். மும்பையின் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் MDSL மற்றும் கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் GRSE ஆகியவற்றில் இந்தியாவின் நவீன போர்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கட்டுமானத்தில் உள்ள ஏழு P17A போர்க்கப்பல்களில் உதயகிரி இரண்டாவது போர்க்கப்பலாகும். உதயகிரி போர்க்கப்பல், முந்தைய ஐஎன்எஸ் உதயகிரியின் நவீன அவதாரமாகும். 31 ஆண்டுகள் நாட்டுக்கு உழைத்த நீராவி கப்பலான ஐஎன்எஸ் உதயகிரி, 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சேவையில் இருந்து நீக்கப் பட்டது.
P-17A கப்பல்கள் மேம்பட்ட ரேடாரில் புலப்படாத வகையில் நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. இது P17 போர்க் கப்பலின் மேம்பட்ட தயாரிப்பு ஆகும். உதயகிரி என்பது PROJECT 17A வரிசையில் தயாரித்த ஸ்டெல்த் ரக போர்க் கப்பலாகும். இது PROJECT 17 போர் கப்பலை விட 4.54 சதவீதம் பெரியதாகும்.
ஒருங்கிணைந்த டீசல் அல்லது எரிவாயு (CODOG) உந்துவிசை உடன் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு (IPMS) மற்றும் Controllable Pitch Propeller ஆகியவை இந்தப் போர் கப்பலில் உள்ளன.
மேலும், ஒரு சூப்பர்சோனிக் மேற்பரப்பு ஏவுகணை அமைப்பு, ஒரு நடுத்தர-தூர-வான் ஏவுகணை அமைப்பு, 76 மில்லிமீட்டர் துப்பாக்கி மற்றும் 30 மில்லிமீட்டர் மற்றும் 12.7 மில்லிமீட்டர் RAPID FIRE நெருக்கமான ஆயுத அமைப்புகள் இந்தப் போர்க் கப்பலில் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இந்த மல்டி மிஷின் போர்க் கப்பல்கள் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை அளிக்கும் என்றும்,மரபுசாரா அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் நீல நிற சூழலில் செயல்படும் திறன் கொண்டவை என்றும் கூறப் பட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பல், நாட்டின் கப்பல் வடிவமைப்பு, கப்பல் கட்டுமானம், மற்றும் பொறியியல் திறமையை வெளிப்படுத்தும் சுயசார்பு பாரதத்தின் அடையாளமாக உள்ளது. இந்தப் போர்க்கப்பலில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட முக்கிய ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சுமார் 200க்கும் மேற்பட்ட நடுத்தர,சிறு மற்றும் குறு நிறுவனங்களும் இந்தப் போர்க் கப்பலின் கட்டுமானத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன. இதன்மூலம், மறைமுகமாக சுமார் 4,000 பேர்களுக்கும், நேரடியாக 10,000க்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன.
மீதமுள்ள 5 ஸ்டெல்த் போர்க் கப்பல்கள், கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், அவையும் நிறைவு பெற்று, இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம், இந்தியக் கடற்படையின் உள் வடிவமைப்பு அமைப்பாகும். இது விமானம் தாங்கி கப்பல், பிற போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற அதிநவீன போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திறனில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது என்பதற்கு உதயகிரி போர்க் கப்பல் சாட்சியாகும்.