ஏற்றுமதி அதிகரித்து வருவதால் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2007 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, கடந்த 11 ஆண்டுகளில்,உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
உலகளாவிய உற்பத்தி சக்தி மையமாக இந்தியா வேகமாக எழுச்சி பெற்று வருகிறது. அதிகமான மக்கள் தொகை, திறமையான பணியாளர்கள் மற்றும் சாதகமான வணிகச் சூழல் ஆகியவற்றுடன், இந்தியத் தொழிற்சாலைகள் உலகளவில் உற்பத்தித் தொழில்களுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன.
இந்தியாவில் உற்பத்தி மையங்களாகக் குஜராத்,மகாராஷ்டிரா தமிழ்நாடு.கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல முக்கிய தொழில்துறை மண்டலங்கள் மட்டுமல்லாமல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் இயங்கி வருகின்றன.
வலுவான ஏற்றுமதி தேவை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றால், நாட்டின் தொழில்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. S&P Global கணக்கிட்ட HSBC இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI ), மார்ச் மாதத்தில் 58.1 ஆக இருந்தது. தற்போது 58.2 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக, 50 புள்ளிகளுக்கு மேல் PMI இருந்தால் உற்பத்தி நடவடிக்கையில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு,இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி, வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட துறைகளில் நுகர்வோர் பொருட்கள் முன்னணியில் உள்ளன. சர்வதேச தேவை காரணமாகவே கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதிக்குப் புதிய ஆர்டர்களும் அதிகரித்துள்ளன.
இது 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, மூன்றாவது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஆகும். மேலும்,14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். ஜனவரி மாதத்துக்குப் பிறகு, பல்வேறு சந்தைகளில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அதிக விற்பனையை இந்திய உற்பத்தியாளர்கள் செய்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.
ஏற்றுமதி தேவைகள் அதிகரித்த காரணத்தால், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கூடுதல் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி செலவுகள் அதிகரித்த அதே வேளையில், விற்பனை விலைகளும் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. பணவீக்கம் மிதமாக இருந்த போதிலும்,விலை நிர்ணய ஏற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அடுத்த 12 மாதங்களில் தொழில் துறை உற்பத்தி மேலும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக 30 சதவீத உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.