ராணிப்பேட்டை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட தொழிற்சாலையில் இருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுநீரகம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் குரோமியக் கழிவு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் குரோமியம், சல்பேட், சோடியம், டைகுரோமேட், சோடியம் போன்ற ரசாயன உற்பத்தி செய்யப்பட்டுத் தோல் தொழிற்சாலைகளுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
நிதிநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2.50 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தற்போதுவரை அகற்றப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அக்கழிவுகள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவி நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
ஆழ்துணை கிணறுகளில் பெறப்படும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் தொடங்கி தென்னை மரத்தில் விளையும் இளநீர் வரை நச்சுத்தன்மை மிக்கதாக இருப்பதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிற்சாலை மூடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாசுக்கட்டுவாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது குரோமியக் கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.