விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னகாமன்பட்டியில் செவ்வாய்க் கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 9ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாயும், பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெறுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலை நிர்வாகம் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, மேலும் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலீசார், உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது இதற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டால், வேற மாதிரி ஆகிடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் எச்சரித்ததால் ஆவேசமடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமாதானமடைந்த உறவினர்களிடம் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.