அஜித் குமார் கொல்லப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், நகை திருடுபோனதாக புகாரளித்த முனைவர் நிகிதா மீது, கடந்த 2011-ம் ஆண்டு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2011-ல் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினின் உதவியாளருக்கு நெருக்கமானவர் என கூறியே மோசடி செய்யப்பட்டதாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அப்போதைய துணை முதலமைச்சர் இப்போது முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பதாகவும் தமிழக பாஜக-வின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் FIR பதிவு செய்யாமல் காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், இரு தினங்களாக வெவ்வேறு இடங்களில் வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கும் நிலையில்,
இந்த சம்பவத்தில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மோசடி குற்றவாளி வாய்மொழியாகக் கொடுத்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக ஒரு அப்பாவி இளைஞரை ஆளும் திமுக அரசு துடிக்கத் துடிக்க படுகொலை செய்துள்ளதாகவும் தமிழக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.