சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோட்டில் பூமிக்கு அடியில் சென்ற கேபிளில் மின்கசிவு ஏற்பட்டு தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது அவ்வழியே டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய நஃபில் என்ற 12ம் வகுப்பு மாணவர் தூக்கி வீசப்பட்டார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் பிளாஸ்டிக் பைப் மூலம் மாணவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மின்சாரத்தை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக பலமுறை போன் செய்தும் யாரும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் மறியல் போராட்டம் நீடித்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.