மகள் இறப்பிற்குக் காரணமான நபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மகளின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்
அந்த மனுவில், மகளுடன் கட்டாய உறவு வைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், வீடியோக்களை வெளியிடுவதாக கேணிக்கரை காவல் ஆய்வாளர் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்திருந்தார்.
காவல் ஆணையர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதால், மகளின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேணிக்கரை காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைப் பார்த்த நீதிபதி, காவல் ஆய்வாளரின் விசாரணை அறிக்கையைப் பார்க்கும்போது அவரது திறமையின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளதாகத் தெரிவித்தார்.
குற்றவாளி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள் இருந்தும், போக்சோ வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், காவல் ஆய்வாளர் ஒரு பெண்ணாக இருந்தும், மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி பெற்ற தர நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கில் விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதற்காக, விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.