கார்பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த ஜூன் 3-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த தண்ணீர் வடக்கு கோடை மேழலகியான் கால்வாய் வழியாக மன்னார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட 4 குளங்களுக்கு வந்தடைகிறது.
இந்நிலையில், மேழலகியான் கால்வாயைத் தூர்வார நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்களது சொந்த செலவில் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
அத்துடன் கால்வாய் தூர்வாரப்படாமல் விட்டதால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.