தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டட ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கனவே இருந்த பழைய கடைகளை அகற்றி விட்டு புதிதாக 40 கடைகள் சுமார் 3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கடைகளுக்கான ஏலம் 4-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலம் எடுப்பதற்கு ஒரு கடைக்கு 3 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகவும், ஓராண்டு வாடகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதற்குப் பேரூராட்சி கவுன்சிலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த ஏல ஒப்பந்தப் புள்ளியில் உள்ள வைப்புத் தொகை, சொத்து மதிப்பு சான்று உள்ளிட்டவற்றைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த ஏலம் ரத்து செய்யப்பட உள்ளதாகப் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.