திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக, செய்யாறு புறவழிச் சாலையில் உள்ள சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் இரண்டாவது நாளாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மற்ற விவசாயிகள் வரும் போது காவல் துறையினர் தடுப்புவேலி அமைத்து கயிறு மூலம் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேல்மா சிப்காட்டை கைவிட வேண்டும் என்று தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகத் தர தரவென்று இழுத்து கைது செய்த சம்பவம் அரங்கேறியது.