மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் உள்ளே, வெளியே என 60-க்கும் மேற்பட்ட காயங்களும், மிளகாய் பொடியை செலுத்தியதற்கான தடயங்களும் இருப்பதை அறிய முடிகிறது.
சுமார் 44 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும், அதில் 12 காயங்கள் சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயங்கள் ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதை காட்டுவதாகவும், ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதை அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
இரும்பு, பிளாஸ்டிக் பைப், ரப்பர் போன்ற ஆயுதங்களால் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என்றும், இது ஒருவரை கட்டி வைத்து, பலபேர் பல இடங்களில் தாக்கியிருப்பதற்கான சாத்தியத்தை காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கபாலத்தில் அடியும், மூளையின் உள்ளே ரத்த கசிவும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிகரெட் சூட்டால் சித்ரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சட்டங்களுக்கு எதிரான இந்த சித்ரவதை தாக்குதல் திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக் கூடியதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்களே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அஜித்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாதாரண மனிதர்களால் தாங்கவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.