சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி செலத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைச்சிறந்த சீடரும், உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவுகளுக்கு சொந்தக்காரருமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒழுக்கநெறிக்கும் சகோதரத்துவத்திற்கும் சான்றாக வாழ்ந்தவர், உலகம் அமைதியாக வாழவேண்டும் என்பதனை தனது ஆன்மீகச் சிந்தனைகள் மூலம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
நமது பாரத தேசத்தின் வளர்ச்சியானது, இளைஞர்களின் துடிப்புமிக்க திறன் வெளிப்படுவதிலேயே உள்ளது என்பதை தீவிரமாக நம்பியவர், இளைய சமுதாயத்தை எழுச்சியூட்டும் விதமாக ஏராளமான பொன்மொழிகளை வழங்கிச் சென்றுள்ளார். சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப வாழ்ந்து தேசத்தை முன்னேற்றுவோம்; சுவாமிகளின் நினைவினை போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்,.
அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நமது நாட்டின் கலாச்சாரத்தையும்,, உயரிய ஆன்மிகக் கோட்பாடுகளையும், உலக அரங்கில் கொண்டு சென்று பெருமை சேர்த்த வீரத் துறவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவுதினம் இன்று. ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த சிந்தனைவாதியாகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் திகழ்ந்தவர். தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கியவர். தேச நலனுக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம் என்றும் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், வீரத் துறவி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இந்தியா ஒரு ஆன்மீக பூமி! இந்தியர்கள், ஆங்கிலேயர்களிடம் தன்மானமிழந்து அடிமைகளாய் வாழ்ந்தபோது, நம்மைத் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழுந்து சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமான பல்லாயிரம் தியாகிகளில் விவேகானந்தரும் ஒருவர்.
அவருடைய பேச்சும் எழுத்தும், இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டின. இந்திய விடுதலைப் போராட்டம் விவேகானந்தர் வருகைக்குப் பிறகு வேறு ஒரு பரிமாணத்தை எட்டியது. இதனால்தான், சுவாமி விவேகானந்தரை, ‘தேசபக்த ஞானி’ என்றும் அழைக்கின்றோம். சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்களை நாம் வாசித்தால், நம் நாட்டுக்கு நாமும் எதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை எழும்.
”எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது” என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் கூறியிருந்தார். நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில், விவேகானந்தரின் கனவை நனவாக்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்,