அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும் என்றும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான மனுக்களைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உட்கட்சி விவகாரத்தில் அதிகார வரம்பு உள்ளதென, ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், ஆரம்பக்கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரியும் அதிமுக பொதுச்செயலாளர் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், கூடுதலாகக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணையில் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.