முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும், தலைமைச் செயலகத்தில் இருந்து சிலர் காவல்துறையை கட்டுப்படுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
சிலர் தலைமைச் செயலகத்தில் இருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகின்றனர் என்று கூறியவர், இரும்பு கம்பியால் அடித்து அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டினார். அவரை தனிப்படை நேரடியாக எப்படி விசாரித்தது என்று கேள்வி எழுப்பியவர் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று திருப்புவனம் செல்ல உள்ளோம், தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தாரை நலம் விசாரிக்க உள்ளோம் என்று கூறினார்.
காவலர்களே இன்று பல குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் பின்னணியில் காவல்துறையைச் சேர்ந்தவர் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்று கூறினார்.
லாக் அப் மரணம் என்பது காவல்துறை நடத்தும் படுகொலை, அதற்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதல்வர் எளிதாகச் சாரி எனக் கூறி கடந்து செல்ல முடியாது என கூறினார்.
நிகிதா பெயரில் பல மோசடி வழக்குகள் உள்ளன என்றும் 2011 முதலே திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிகிதா தலைமைச் செயலகத்தில் யாரைத் தொடர்பு கொண்டார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் தொடக்க விழா உட்பட அனைத்து இடங்களிலும் பாஜக இணைந்து செயல்படும் என்றும் பாமக பிளவிற்கு பாஜக காரணமல்ல என்று கூறியவர் பாமக தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.