திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் நூறு வயதைக் கடந்த மூதாட்டி குட்டியம்மாள். தான் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே குடியிருக்கும் மூதாட்டி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு மற்றும் சேர்வலாறு என்ற இருபெரும் அணைகள் அமைந்துள்ளன.
அந்த அணைகளைச் சுற்றி பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இஞ்சிகுழி என்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமம் ஒன்று அமைந்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள்
இஞ்சிகுழி கிராமத்தில் மிளகு, கிராம்பு, ஏலம் போன்றவற்றை விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அவ்வப்போது வந்து செல்லும் நிலையில் மூதாட்டி குட்டியம்மாள் மட்டும் இதே பகுதியிலேயே தங்கியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவின் முயற்சியால் மாதம் தோறும் முதியோர் உதவித் தொகையைப் பெற்றுவரும் மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு அதே பகுதியிலேயே வாழ்ந்து வருகிறார்
போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தாலும் இங்குக் குடியிருந்த மற்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வேறு பகுதிக்குச் சென்றுவிட்ட நிலையில் தான் பிறந்து வளர்ந்து இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார் மூதாட்டி குட்டியம்மாள்
வயது நூற்றைக் கடந்தாலும், முதுமை வாட்டி வதைத்தாலும் குட்டியம்மாள் மனதில் இருக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் அவரை வாழவைக்கும்.