சென்னை வால்டாக்ஸ் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளைத் திறக்காத காரணத்தினால் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசிக்கும் சூழலுக்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் நேரத்திற்காகக் காத்திருக்காமல் உடனடியாக திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் மீனாம்பாள் சிவராஜ் நகர் எனப்படும் எம் எஸ் நகர் பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த மக்களுக்கு 1970களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அரை நூற்றாண்டுகள் கடந்து பழுதடைந்து காணப்பட்ட குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. 18 மாதங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு வேகமாகத் தொடங்கிய கட்டுமானப்பணி கொரானா பரவல் காரணமாக அடுத்த இரு ஆண்டுகளுக்கு தடைப்பட்டது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அப்பணிகள் மீண்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆமை வேகத்திலேயே நடைபெற்றதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியிருப்புகள் கட்டி முடித்து தங்களிடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் அருகிலேயே வாடகை வீடு எடுத்துத் தங்கிய மக்கள் இப்போது வரை அதே வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர்.
176 குடியிருப்புகள் இருந்த நிலையில் தற்போது வெளிப்பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து மக்கள் உட்பட 308 பேருக்கு வீடுகள் ஒதுக்குவதற்கான டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடுகளை தங்கள் வசம் ஒப்படையுங்கள் என ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுப்புது காரணங்களைச் சொல்லி அலைக்கழிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எம் எஸ் நகருக்குப் பின்பாக தொடங்கப்பட்ட யானைக்கவுனி, திருவிக நகர், முல்லை நகர் ஆகிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் திறந்து வைக்கும் தேதிக்காக தங்களைக் காக்க வைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தால் மீண்டும் குடிசைகள், கொட்டகைகள் அமைத்து 1970களில் வாழ்ந்த அவல நிலைக்கே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளனர். கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக திறப்பதோடு அதனை உரியப் பயனாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.