திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், அவர்களுக்கு பாஜக சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி, தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 24-வது லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், உயிரிழந்த அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலை வழங்கியது வெறும் கண்துடைப்பு என்று குறிப்பிட்ட அவர், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என அவரது தாயார் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
அறநிலையத்துறை அலுவலகமே திமுகவின் சப்போர்ட்டில்தான் இருப்பதாகவும், அங்கு எதுவும் நடக்கும் என்றும் கூறினார். தமிழகம் முழுவதும் ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடப்பதாகத் தெரிவித்த அவர், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டார்.