மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் முதலில் விடுதி அருகே அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையின் வாகனம் அப்பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுக் கடந்த 3 நாட்களாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நீதி விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி அஜித்குமார் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அரசு மாணவர் விடுதி அருகே வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு அறநிலையத்துறை அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள கோசாலையில் வைத்து தாக்கியபோது அஜித் குமார் சுயநினைவை இழந்ததால், போலீசார் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படும் 28-ம் தேதி, மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அதிலிருந்து சிலர் இறங்கியபின் வாகனம் அறநிலையத்துறை அலுவலகம் இருக்கும் திசை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.