பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதாவுடன் அண்ணாமலை இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற படம், சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணாமலையுடன் இருப்பது பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதைத் தொடர்ந்து கட்சி பிரமுகர்களுடன் பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்ற ராஜினி, தன்னுடைய புகைப்படத்தை நிகிதாவுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரளித்தார்.