சென்னை அய்யப்பாக்கம் பகுதி திருமண மண்டபத்தில் கிடைத்த நகைபெட்டியை மண்டப பணியாளர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர், கடந்த மாதம் 27ம் தேதி அய்யபாக்கத்தில், உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பினர். அப்போது, தாங்கள் கொண்டு சென்ற நகைப்பெட்டியை மண்டபத்திலேயே தவற விட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதை கண்டெடுத்த மண்டப பணியாளர் ஜெயமணி, அதனை மண்டப மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உரியவர்களிடம் நகைப் பெட்டி ஒப்படைக்கப்பட்டது.
பெட்டியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நகை இருந்ததாக கூறப்படும் நிலையில், ஜெயமணியின் நேர்மையை பாராட்டிய ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், அலுவலகத்திற்கு வரவழைத்து அவருக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.