திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர், ஒடிசாவில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கொடைக்கானலுக்குச் செல்வதாகக் கூறி, கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் சில நாட்களில் தொலைபேசி மூலம் பெற்றோரை தொடர்புகொண்ட அஜித், தன்னை சிலர் ஒடிசாவிற்கு கடத்திச் சென்று விட்டதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒடிசாவுக்கு விரைந்தனர். இந்நிலையில், ஒடிசா ரயில் நிலையம் அருகே உயிரிழந்த நிலையில் அஜித் சடலமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
புழல் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அபினேஷ் என்பவருடன் அஜித் ஒடிசாவுக்கு வந்ததாகவும், இருவருக்கும் இடையே கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் அஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள அபினேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.