அறுபடை வீடுகளில் 2ஆம் படையான வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.
கடந்த மாதம் 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதேபோல் கடந்த 1-ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது செந்தமிழில் மந்திரங்கள் ஓதி 157 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
மகா கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீன மடாதிபதிகள், ஆன்மிக குருமார்கள் கலந்து கொண்டனர். மேலும், கடலோரத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.