பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியம் மீதான நேரடித் தாக்குதல் எனக் குற்றம்சாட்டினார்.
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகவும் கடுமையான சவாலாக மாறியுள்ளது எனவும், பயங்கரவாதிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதில் எந்த தயக்கமும் இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் பயங்கரவாத ஆதரவாளர்களையும் ஒரே தராசில் எடைபோட முடியாது எனவும், பயங்கரவாதத்திற்கு மௌனமாக ஒப்புதல் அளிப்பதும் அதனை ஆதரிப்பதும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்பட கூடாது எனவும் தெரிவித்தார்.
எந்தவொரு நாடும் பயங்கரவாதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
உலக அமைதி மற்றும் செழிப்புக்காக பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதம் போன்ற விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.