2008ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராக செயல்பட்டதாக தஹாவூர் ராணா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டுவருக்கிறது.
இந்த விசாரணையில் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் தஹாவூர் ராணா கூறியுள்ளார்.
மேலும் 2008 தாக்குதலுக்கு முன்னதாக மும்பையில் பல பகுதிகளில் உளவு பார்த்ததாக கூறிய ராணா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலைத் தாக்கியபோது தான் அந்தப் பகுதியில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
வளைகுடாப் போரின் போது தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதலில் ஒரு உளவு வலையமைப்பாக உருவாக்கப்பட்டது என்று ராணா கூறினார்.
மேலும், தனது கூட்டாளியான டேவிட் ஹெட்லி, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுவுடன் பல பயங்கரவாத பயிற்சி கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத்தின் உத்தரவின் பேரில் மும்பை தாக்குதல்களுக்கான திட்டமிடல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவரது நண்பர் டேவிட் ஹெட்லியுடன் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டியது.
மும்பை தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ராணா ஈடுபட்டதாகவும், விசா பெறுவதில் ஹெட்லிக்கு உதவியதாகவும், இந்தியாவுக்குச் செல்ல ஒரு தவறான அடையாளத்தை உருவாக்கியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ராணா மீது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.