உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எனும் பெருமையைக் கொண்ட சென்னை மெரினா கடற்கரை தற்போது நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. நீலக்கொடி சான்றிதழைப் பெறச் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் பல்வேறு கடற்கரைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை, கடற்கரை தூய்மை, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மதிப்பீடு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை, சிறந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி வருகிறது.
அந்த நீலக்கொடி சான்றிதழை மெரினா கடற்கரைக்குப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கும் சென்னை மாநகராட்சி முதற்கட்டமாக 6 கோடி ரூபாயை ஒதுக்கி அழகுபடுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரைக்கும் சான்றிதழ் பெறும் முயற்சிக்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நடைபாதை, விளையாட்டுப் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், 360 டிகிரி கண்காணிப்பு கேமரா, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை அமைக்கப்பட்டு வருகின்றது. இயற்கையான ஓலைகளைக் கொண்டு ஆங்காங்கே கூரை அமைக்கப்பட்டு, மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட சாய்வு நாற்காலிகள், மெரினா கடற்கரையின் அழகை மேலும் கூட்டியிருக்கின்றன.
அதே போல குடில் போன்ற அமைப்பிலான ஓய்வு அறை, தாய்மார்கள் பாலூட்ட ஏதுவான வசதி என பல்வேறு கட்டுமானங்கள் இயற்கையான முறையில் செய்து முடிக்க பணிகள் விரைவுப் படுத்தப்பட்டுள்ளன.
தினசரி இரண்டு முறை கடற்கரையானது தூய்மைப் படுத்தப்பட்டு, பார்ப்பதற்கே சமபரப்பாக காட்சியளிக்கின்றது. பாதுகாப்பினை கருதிக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது, அதே போல 360 டிகிரி கோணத்தில் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஏற்கனவே 1.4 கோடி ரூபாய் அளவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை மறு சீரமைக்கும் பணிகளுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மரப்பலகைகளை அகற்றி, மாற்றுக் கட்டுமான வசதியுடன் கூடிய நடைபாதையை அமைக்கத் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.
நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்குக் கடற்கரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பலகைகள் கடற்கரை மாசுபடாது இருக்க நடவடிக்கை, சுத்தமான கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும் பட்சத்தில் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்களின் பொழுதைக் கழிக்கக் கூடிய முக்கியமான இடமாக மாற வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நீலக்கொடி அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 80 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகச் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
எழில் கொஞ்சும் அழகில் மெரினா கடற்கரை முற்றிலுமாக உருமாற்றப்பட்டு, நீலக்கொடி தரச்சான்று பெற்று விட்டால், உலக அளவில் தனி அடையாளம் பெறுமாயின், நிச்சயம் சுற்றுலா வளர்ச்சி பெருகி பொருளாதார முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.