நீங்கள் சீனாவில் உள்ள (Baotou) பாவோடோவைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் இங்குள்ள சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் தான் உலகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் நவீன வாழ்க்கையைத் துடிப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இந்த 21ம் நூற்றாண்டின் தங்க வேட்டையின் மையமாக விளங்கும் இந்த நகரத்தில் தான், செயற்கையாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய விஷ ஏரியும் உள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு
சீனா உலகின் மிகப்பெரிய “அரிய மண்” தாதுக்களை வழங்கும் நாடுகளில் ஒன்றாகும். உலகின் இந்த தனிமங்களின் விநியோகத்தில் 95 சதவீதத்தைச் சீனா உற்பத்தி செய்கிறது. சீனாவின் அரிய மண் தனிம உற்பத்தி சுமார் 150,000 டன் ஆகும்.
Baotou பாவோடோ- உலகத்தின் அரிய மண் தொழில்துறையின் தலைநகரம் ஆகும். பாவோடோவுக்கு வடக்கே உள்ள (Bayan Obo) பயான் ஓபோ சுரங்கம் உலகின் மிகப்பெரிய அரிய மண் தனிம சுரங்கமாகும். இந்த சுரங்கம் சுமார் 2300 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.
(Bayan Obo) பயான் ஓபோவில் உள்ள இரும்புத் தாது இருப்பு முதன் முதலில் 1927 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 1935 ஆம் ஆண்டு, அரிய மண் தனிமங்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டன.
(Bayan Obo) பயான் ஓபோ சுரங்க மாவட்டம் 328.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த மாவட்டத்தில் மங்கோலியா, ஹான் மற்றும் ஹுய் இன மக்கள் உட்பட 11 இனக்குழுக்களைச் சேர்ந்த 27,600 பேர் வசிக்கின்றனர். இவர்களில், 22,100 பேர் சுரங்கத்தில் ஊழியர்களாக உள்ளனர். இது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.
உலகில் அறியப்பட்ட மொத்த அரிய தனிமங்கள் இருப்புக்களில் 40 சதவீதத்துக்கு அதிகமாகவும், உலகளாவிய அரிய மண் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கு அதிகமாகவும் இங்கே உள்ளது. சுமார் 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிரூபிக்கப்பட்ட அரிய மண் இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சீனாவின் மொத்த அரிய மண் இருப்புக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாகும். இது உலகில் உள்ள தாது இருப்புக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டு, Baogang அரிய மண் சுரங்கம் கட்டப்படுவதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை தர்பூசணிகள், கத்தரிக்காய்கள் மற்றும் தக்காளிகள் என வயல்கள் நிறைந்திருந்தன.
கடந்த 71 ஆண்டுகளில், சுத்திகரிப்பு நிலையம் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக, 1950ல் வெறும் 97,000 ஆக இருந்த மக்கள் தொகை, 25 லட்சமாக உயர்ந்துள்ளது. பிரம்மாண்டமான புகைபோக்கிகளுடன் கூடிய தொழிற்சாலை இந்தப் பகுதியின் நிலப்பரப்பையே தலைகீழாக மாற்றியுள்ளது.
பாவோகாங் சுத்திகரிப்பு நிலையத்தின் பரந்த வளாகம் எங்கே முடிகிறது, நகரம் தொடங்குகிறது என்பதைச் சொல்ல முடியாத அளவுக்கு நகரமெங்கும் குழாய்கள் பெரிய இரும்பு மலைப் பாம்புகள் போல் கிடக்கின்றன. பெரிய டீசல்- நிலக்கரி லாரிகளின் தொடர்ச்சியான ஓட்டத்துக்கு வசதியாக இங்குள்ள தெருக்கள் அகலமானதாக அமைக்கப்பட்டுள்ளன.
ஏரியைச் சுற்றியுள்ள சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து அடர்த்தியான, கருப்பு, இரசாயனக் கழிவுகளை அவை வெளியேற்றுகின்றன. கந்தகத்தின் வாசனையும் குழாய்களின் கர்ஜனையும் ஆக்கிரமித்துள்ள காற்று அதிக வெப்பத்துடன் வீசுகிறது.
அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மிச்சமான நச்சு கழிவுகளைக் கொட்டுவதற்காக, செயற்கையாக ஒரு ஏரி 1965ம் ஆண்டில் கட்டப்பட்டது. சுமார் 10 கிலோமீட்டர் நீளமும் 2 கிலோமீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த ஏரி சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வெய்குவாங் அணை என்று அழைக்கப்படும் இந்த செயற்கை ஏரி மழைக் காலத்தில் சேறாகவும், கோடைக் காலத்தில் காய்ந்தும் விடுகிறது. சுரங்கமும் சுத்திகரிப்பு நிலையமும் இப்பகுதியின் விவசாயத்தை அழித்துவிட்டன. முதலில் விலங்குகள் நோய்வாய்ப்பட்டன. பின்னர் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். சொல்லப்போனால், அனைவரும் நோய்வாய்ப்பட்டனர்.
நச்சு ஏரியிலிருந்து சேகரித்த களிமண்ணில் மூன்று மடங்கு கதிரியக்க தோரியம் உள்ளது. குழந்தைகளுக்கு அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை, குழந்தைகளின் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அரிய மண் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
சுரங்கமும், சுத்திகரிப்பு நிலையமும், விஷ ஏரியும் கடுமையான சுற்றுச் சூழல் பாதிப்பையும் பெருமளவில் பல்லுயிர் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அரிய மண் சுரங்கங்களில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் சீனா அதற்காக, சுற்றுச்சூழலில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கச் சீனா பல பில்லியன் டாலர்களைச் செலவு செய்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என எதிர்கால தேவைகள் அதிகரிக்கும் வேளையில் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சீனாவுக்கு ஆபத்தானவையாக உள்ளன.