திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பழையகோட்டையில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தங்கப்பாண்டி குடும்பத்தினர் மீது வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கப்பாண்டி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திமுக ஊராட்சி மன்ற தலைவரான சின்னு என்பவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் தங்கபாண்டியின் வீட்டுக்கு வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான காவலர்கள் சீருடையின்றி சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த தங்கப்பாண்டியின் மனைவி மற்றும் மகனையும் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.