கடலூர் செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி கோரியும் ஓராண்டாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.
கடலூரில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் ஏற்பட்ட விபத்து வருத்தமும், வேதனையும் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் இன்றே வழங்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதாலேயே ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்ததாக விளக்கமளித்துள்ளது.
விதிகளை மீறி ரயில்வே கேட்டை திறந்த கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக் கடந்த ஓராண்டாக அனுமதி கோரியும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளது.